சில நேரங்களில்
சில நேரங்களில்
அனுமானங்கள்
அனுபவமாக
அவதரிக்கிறது ...
சில நேரங்களில்
அனுமானங்கள்
அவமானங்களாய்
அவதரிக்கிறது ...
சில நேரங்களின்
இலக்கணம் புரியாமல்
பல நேரம்
பலர்
அனுமானங்களை
கைவிட்டு
கேட்பார் கைப்பிள்ளையாய் ....
திருடன் தோப்பு
பதிவுகள் எல்லாம்
நிஜங்களில்லை ..
நிஜங்கள் எல்லாமே
பதிவுகளாவதில்லை ..
சில வக்கிரர்களின்
வஞ்சனை வாசம்
சில கோபக்காரர்களின்
கோர முகச்சாயம்
சில சூழ்நிலைக்காரர்களின்
சூட்சம சூழ்நிலையியல்
சில ஏமாற்றுக்காரர்களின்
ஏகாதிபத்திய சித்தாந்தம்
இப்படியேனும்
பலதரப்பட்ட
குளறுபடிகள்
குப்பைத்தொட்டியாகவே
பல வரலாறுகள்
வலுவிழந்து
வசைபாடப்படுவதற்கு
வாக்காக அமைந்தது விட்டது ...
எதிர்கால தலைமுறையில்
வரலாறுகள் மாற்றியெழுதப்படாது
மாறாக
மாற்றி எழுதப்பட்டவைகளெல்லாம்
வரலாறாக ஓங்கி நிற்கும் ....
பொட்டல் காடு
செம்புழுதியில
உருண்டு பிரண்டு
சொம்புத்தண்ணியே
சோறா உண்டு
உச்சி வெயிலில
உஷ்ண உடம்பா
காலனியனியா காளையாய்
காளையோடு
மண்ணோடு மண்ணாக
போகும் மட்டும்
வித விதைச்சு
அறுவடை செஞ்சு
நெஞ்சுத்தண்ணி முட்டி
நடையா நட நடந்து
அறுத்த கூலிக்கே
தாலியருக்குற நேரத்திலும்
எல்லோருக்கும்
நல்ல சோறு போட்ட
நம்ம விவசாயி மக்க
ரேஷன் கடையிலே
புழுவிழுந்த புழுங்கல் அரிசி வாங்க
அடையாள அட்டை எடுத்து வந்து
அடையாளம் தெரியாம போகுறான் ...
இழப்பின் கண்ணீர்
என்னை மயானத்தில்
மாடு மேய்க்க விட்டுவிட்டு
குடமுழுக்கு தீர்த்தத்தில்
குளிக்கிறது உன் கூந்தல்
என் நிழலும் போதையில் தள்ளாட
உன் உலகம் புது உறவில் கொண்டாடுது
தென்றல் ரசித்த என் ஜன்னல்
புயலில் சிக்கி புலம்புகிறது
பூமியின் சுழற்சியே அறியாமல்
உன் பூவிழியில் தொலைந்த என் நாட்கள்
என் இதயக் குடுவையின் முழுப்பரப்பிலும்
உன் நினைவுக்கு கூடுகள் மூச்சடைக்குது
கட்டுப்பாடின்றி உன்மேல் வைத்த அன்பு
இன்று என் கட்டளைகளை காலால் உதைக்கிறது
நடைப்பிணமாக நான் நடக்க
அலங்காரங்களுடன் அங்கு ஆரவாரம் ஆர்ப்பறிக்குது
பிணமாகும் வரை இனி புலம்பல் தான் என் தாய் மொழியோ ?
பகட்டுத்தனம்
அதிகாரம் கால் மேல் கால் போட்டு உட்கார்ந்திருக்க
அடக்குமுறையின் கைகள் ஓங்கி அடிக்க
பணபலம் பாதாளம் வரை பாய
உழைப்பவனின் கால்கள்
ஊனமுற்றுதான் கிடக்கும்
பாடையில் போகும் போதும்
மாற்று ஆடைக்கும் வழியில்லாமல் ...
அனாதையான அனாதைகள்
யாருக்கும்
உபயோகம் இல்லாததாலோ
இல்லை
தேவை முடிந்த பின்
தூக்கியெறியப்பட்டதாலோ
வேண்டாப்பொருளாய்
"குப்பை " என்னும்
பொது மொழியோடு
தெருவெங்கும்
சாக்கடையெங்கும்
கேட்பாரற்று
கிழிந்து
நைந்து
கிடக்கும்
எங்களை தீயிலிட்டு
மீண்டும் எரித்து
காற்றோடு கலக்கையில்
மூக்கை மூடிக்கொள்ளும்
மூடர்கூடம்
உங்களுக்கு
எப்படி தெரியும்
எங்களின் வலிகள் ......
பூமித்தாயே
ஓலைச்சுவடியில்
மட்டும்
பல வரலாறுகள்
மீசை முறுக்கி
கம்பீரத்துடன்
கட்டுண்டு கிடக்க
ஓலைச்சுவடியோ
ஒளிந்து கிடக்கும்
இடமறியாமலும்
பரணியில் போட்ட
பழைய பொருளாகவும்
நீண்ட நாள் புதையுண்டு
மண்ணில் மட்கிப்போன
பல கரையான்கள்
பல முறை அரித்தும்
சிதைந்து போய்
சின்ன சின்ன
துகள்களாக
காற்றோடு காற்றாக
கலந்தும்
கரைந்தும்
கடந்தும்
எங்கேயோ தொலைந்துவிட
பல வர்ணங்கள் தீட்டப்பட்டும்
ஆதி அணு அழிக்கப்பட்டும்
தனக்கே தன்னையே
அடையாளம் அறியாதவாறு
பல அச்சுகளிலும்
பல அகழ்வாராய்ச்சிகளிலும்
கிடைத்தும்
கிடைக்காமலும்
அனாதையாய்
கைவிடப்பட்ட
உன் முன்குடி மக்களின்
மூடப்பட்ட
மறைக்கப்பட்ட
உண்மைகள்
உனக்கு தெரியுமா ?
தெரிந்தும் மௌனமா ?
பூமித்தாயே!!!
நிழல் ஓவியம்
சற்று முதிர்ந்த முகம்
அதற்கேற்ற முகபாவனை
நடுத்தர நிறம்
ஆனால் மேல்தட்டு பாவனை
எங்கோ பார்த்த முகச்சாயல்
பல நாள் கேட்ட குரல்வலையின் குரல்
இவ்வுருவ நிழல்
என்னுடன் நீண்ட நாள்
பயணித்ததாக ஒரு அனுமானம்
தயங்கி போய் கேட்டேன்
நீங்க " ராஜு " தானே ....
சொல்லு மச்சி எப்படி இருக்க
என்ற பதில் தொனியில்...
என் பள்ளிப்பருவ நட்பு
பல்லிளித்துக் கொண்டது ...
மீள் கனா
அவள்
பட்டாம்பூச்சி தேசத்தின் தேவதை
மின்மினிகள் அவளுடன் ஏதோ
உரையாடி செல்லும்...
கட்டெறும்பும் சிற்றெறும்பும்
அவள் கால் நகம் தேடி வரும் ...
இலையுதிர் கால இலைகளெல்லாம்
அவள் கூந்தலில் ஆசி பெரும் ...
வர்ணக்கலவைகளெல்லாம்
அவள் மருதாணி நிறம் முன்
சற்று மங்களாகவே தெரியும் ...
இப்படி கனவு முடிந்தது
நேற்று இரவின் கற்பும் தொலைந்தது ..
ஆனால் அவளிட்ட
முத்தத்தின் ஈரம் மட்டும்
இன்னும் ஏனோ முணுமுணுத்துக்கொண்டே
இன்றைய இரவின் வாயிலைத் தேடுகிறது ...
இதுவும் தானே
நாம்
சாதிக்க தேவை
கனவு
ஆர்வம்
இலக்கு
திட்டமிடல்
உழைப்பு
விடாமுயற்சி
இது மட்டும் தான்
என்றிருந்தேன் ...
நாம் சாதிக்க
ஒரு சாதனையும் தேவைப்படுகிறது ....
நிலவழகு
கிணற்று நீரில்
தன் முகம் பார்த்த
நிலவு
தன்னழகில் மயங்கி
வெட்கத்தில்
முகத்தை
மூடிக் கொண்டது...
நினைவுத் தீ
என் முனை உடைந்த
பேனாவின் கிறுக்கல்கள்
அவளின் நினைவுகளையே
நித்தம் நித்தம் நிந்திக்கிறது ...
பேறு காலத்தில்
என் பேனா
கவிதையாய்
அவளையே பெற்றுடுக்கிறது ...
அவளின் நினைவுத்துளிகள்
என் பேனாவின் மைத்துளிகள் ...
என் எழுத்தெல்லாம்
அவளின் எதார்த்தங்களையே
பதிவுசெய்கிறது ...
எரிமலையாய் என்னையே
எரிக்கிறது ...
கொழுந்துவிட்டெரியும்
காட்டில்
உயிருக்குப் போராடும்
ஒற்றை மரமாய் நான் ...
தெருவெல்லாம் தேவதை
திருவிழா செல்ல
என்தேவதை மறுத்துவிட்டாள்
எனவே திருவிழாவே
என்தேவதையைத் தேடி வந்துவிட்டது..
முதல் கனவு
என் கண்களின்
சேமிப்புக் கிடங்கில்
முழுவதுமாய் ஆக்கிரமித்து
எல்லாக் காட்சியிலும்
நிழலாய் பின்னிருந்து
உன்னுருவையே
முன்னுருவமாய்
நிலை நிறுத்தும்
முழுநிலவே ...
என் முதல் கனவே !